Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தபசுகால சிந்தனைக்கு:





நமதாண்டவர் அனைத்து புண்ணியங்களையும் தனது ஆத்துமத்தில் கொண்டிருந்தார். அவைகளை விசேஷவிதமாக தமது பாடுகளின் போது வெளிப்படுத்தினார். தமது பரம பிதாவின் மீது அவருக்கிருந்த நேசம், மனுக்குலத்தின் மட்டில் அவர் கொண்டிருந்த அன்பு, பாவத்தின் மீதான வெறுப்பு, தனக்கு எதிராகச் செய்யப்பட்ட அவமான நிந்தைகளை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல், அவற்றிற்கு காரணமானவர்களை முழுமனதோடு மன்னித்தல், சாந்த குணம், தைரியம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை, கீழ்ப்படிதல், இரக்கக்குணம் இவை அனைத்துமே அவரது கொடிய துக்கம் நிறைந்த பாடுகளின் போது பிரகாசமாய் ஒளிர்ந்தது.
கிறீஸ்துவின் பாடுகளைத் தியானிக்கும்போது, நாம் வாழ வேண்டிய வாழக்கையின் மாதிரிகையை அதில் காண்கிறோம். இம்மாதிரிகை வியக்கத்தக்கவைகளாக மட்டும் அல்லாமல், அதை பின்பற்றக்கூடியதாகவும், நமது சக்திக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது. கிறீஸ்துவின் ஞான சரீரத்தின் உறுப்புகளாய் இருக்கிற நாம், நம்முடைய சிரசாகிய கிறீஸ்துநாதருக்கு ஒத்தவிதமாய் மாற வேண்டும். அதற்கு அவருடைய பாடுகளின் போது வெளிப்படுகின்ற புண்ணியங்களை நாமும் கடைபிடிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இதனால்தான் நமதாண்டவர்: “…யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால் தன்னைத் தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அநுதினமும் சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லக்கடவான்” (லூக்.9:23) என்று அழைக்கின்றார்.
கிறீஸ்துவின் பாடுகளைத் தியானிப்பதால், நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தின் அளவிற்கு ஏற்ப, அவரின் புண்ணியங்களை நாமும் அனுசரிக்க தேவையான வரப்பிரசாத உதவியை நமக்குத் தருகிறார். இது எங்ஙனம்?
நமதாண்டவர் சேசுநாதர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டு போய் மனிதர்களின் சரீர நோய்களைக் குணப்படுத்தியது. அவர்களின் மன அந்தகாரத்தை விரட்டியது. நாம் அவருடன் ஐக்கியப்படும் போது, விசுவாசத்தால் அவரோடு இணையும் போது இதே போன்று திகழ்கிறது. அன்று, அவரை நேசத்தோடு கல்வாரி மலைக்கு பின்சென்றவர்களுக்கு அல்லது சிலுவை உயர்த்தப்பட்டு பலியாக்கப்பட்ட போது, அங்கு இருந்தவர்களுக்கு விசேஷ வரப்பிரசாதங்களை பொழிந்தருளினார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அன்று அவரிடமிருந்து வல்லமை வெளியேறியது போல, இன்றும் நடக்கத்தான் செய்கிறது. விசுவாச உணர்வால் தூண்டப்பட்டு, சேசுவின் பாடுகளை நினைத்து துக்கிக்கும் போதும், அவரை நினைவால் பின்பற்றி அரசனின் நீதி மண்டபத்திலிருந்து, கல்வாரி வரை செல்லும் போதும், அவருடைய திருச்சிலுவையின் அருகில் வியாகுல மாதாவுடன் நிற்கையில் அன்று வழங்கிய வரப்பிரசாதத்தை இன்னமும் நமக்குத் தருகிறார்.
பாலைவனத்தில் அன்று இஸ்ராயேல் ஜனங்கள் மோயீசனுக்கு எதிராக முணுமுணுப்பு செய்ததற்குத் தண்டனையாக, சர்வேசுரன் சர்ப்பத்தை அனுப்பி கடிக்கச் செய்து சொல்லொண்ணா அவதிபட வைத்தார். ஆனால் அவர்கள் மனஸ்தாபப்பட்டதினால், மோயீசனுக்கு வெண்கலத்தினால் செய்யப்பட்ட சர்ப்பத்தை உயர்த்தும்படியும், அதைக் காண்பவர்கள் காப்பாற்றப்படுவர்கள் என்றும் கட்டளையிட்டார். நமதாண்டவர் வாக்கின்படி, இவ்வெண்கல சர்ப்பம் கிறீஸ்து சிலுவையில் உயர்த்தப்படுவதன் முன் அடையாளமேயன்றி வேறில்லை! அன்றியும் நான் பூமியினின்று உயர்த்தப்படுவேனாகில், எல்லாவற்றையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்என்றார். (அரு.12:32-33) சேசுநாதர் சிலுவைப்பலியின் வழியாக நமக்கு எல்லா வரப்பிரசாதங்களையும் பேறுபலன்களையும் சம்பாதித்தபடியால், நமக்கு ஒளியின் ஊற்றாகவும், வல்லமையின் கருவூலமாகவும் இருக்கிறார். ஆகையால்தான், தாழ்ச்சியுடனும், சிநேகத்துடனும் அவருடைய மனித சுபாவத்தை நோக்கும் போது, அது மிக்கப் பலன் அளிக்கவல்லதாக, வல்லமைமிக்கதாக இருக்கிறது.
ஆண்டவருடைய பாடுகளை விசுவாசத்துடனும், பக்தியுடனும் தியானித்தால், சர்வேசுரனுடைய அன்பும் நீதியும் நமக்கு வெளிப்படுத்தப்படும். அதோடு நமது தாழ்நிலையையும், பலவீனங்களையும், நமது ஒன்றுமில்லாமையையும் அறிந்து கொள்வோம். அதோடு நமது புத்தியறிவினால் நாம் அறிவதைவிட, மேலான விதத்தில் நமது பாவத்தின் கனாகனத்தையும் அதன் அருவருப்பையும் அறிய வருவோம்.
ஆண்டவருடைய பாடுகளைத் தியானிப்பதால் கிடைக்கின்ற பலன்களை சிறிது விளக்கியப் பிறகு, வாசித்து தியானிப்பதற்கு சில சிந்தனைகளை தருவது நல்ல பலனளிக்கும் என்று நம்புகிறோம்.
சேசுவின் பாடுகளின் தியானம்:
                வேதசாட்சிகளுடைய மரணத்தைப் பார்த்து திருச்சபை மிகவும் அக்களிப்புக் கொள்கிறது. ஏனென்றால் அவர்களுடைய மரணம் திருச்சபையினுடைய மகிமையாக, வெற்றியாகத் திகழ்கின்றது. அவர்களின் இரத்தம் திருச்சபையின் வித்தாக மாறுகின்றது. அதனால் திருச்சபை வளர்கிறது. வேதசாட்சிகளுடைய மரணத்திற்கு நாம் காரணமல்ல, அவர்களுடைய இரத்தம் நம்மை கறைப்படுத்துவதில்லை. ஆனால் திருச்சபை தனது மகா பரிசுத்த பத்தாவான சேசு கிறீஸ்துவின் பாடுகளை, மரணத்தைக் குறித்து மிகவும் துக்கிக்கிறது. விசனப்படுகிறது. எதற்கென்றால் அவருடைய பாடுகளுக்கு, இரத்தம் சிந்துதலுக்கு திருச்சபையின் மக்களாகிய நாமும் காரணமாக இருக்கிறோம். மெய்யாகவே சேசுநாதருடைய உயிரைப் பறித்த கொலையாளிகளாக இருக்கிறோம். ஆம், கடவுள் - மனிதனான சேசு 30 வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்படுவதற்கு - காட்டிக் கொடுப்பதற்கு, கன்னத்தில் அறையப்படுவதற்கு, பழித்து நிந்திக்கப்படுவதற்கு, இரத்தம் சிந்தி அகோரமாக சிலுவை மரணம் அடைவதற்கு நாம் தான் காரணம்! தனது நேசரின் மரணத்திற்கு தன்னுடைய பிள்ளைகளே காரணமாய் இருப்பதைக் கண்டு திருச்சபை மிகவும் துக்கப்படுகிறது. சேசு கிறீஸ்துநாதர் துன்பம் அனுபவிப்பதைக் கண்டும், அவரைத் துன்பப்படுத்துபவர்களுடைய கொடூரத் தன்மையைக் கண்டும் வேதனைப்படுகிறது திருச்சபை. அதனுடைய துக்கத்தோடு நாமும் துக்கித்து திரளான கண்ணீர் சிந்துவோமாக!
சேசுநாதர் ஜெத்சேமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்க்கிறார்.                (அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் எழுதிய சேசு கிறீஸ்துவின் பாடுகளும், மரணமும்என்ற நூலிலிருந்து)
I
இதோ நம்முடைய நேச ஆண்டவர் ஜெத்சேமனி என்னும் தோட்டத்தில், தன்னுடைய கசப்பான பாடுகளை அனுபவிப்பதற்கு மனமுவந்து கையளிக்கிறார். அவர் பயப்படவும், சலிப்படையவும்” (மாற்.16:33) “துயரப்படவும், ஆயாசப்படவும்” (மத்.26:37) தொடங்குகிறார்.
முதலில் தாம் அடையவிருக்கும் மரணத்தைக் குறித்தும்;, படப்போகும் பாடுகளைக் குறித்தும், நினைத்து, யோசித்து பயப்படுகிறார். நம் ஆண்டவர், தானாக முன்வந்து தன்னையே இப்பாடுகளுக்குக் கையளிக்கிறார். அப்படியானால் பின் ஏன் பயப்பட வேண்டும்? “அவர் தானே இஷ்டப்பட்டு நிவேதனமாயினார் (பலிப்பொருளானார்)” (இசை.53:7) அவர் தாமே விரும்பி அல்லவா தன்னையே ஒப்புக்கொடுத்தார் என்கிறார். இப்பாடுகளின் நேரத்திற்கு விரும்பி அல்லவா காத்திருந்தார். சற்று முன்னர்தான், இராப்போஜனத்தின் போது, “நான் பாடுபடுவதற்கு முன்னே இந்தப் பாஸ்காவை உங்களோடு கூட உண்ணும்படி ஆசைமேல் ஆசையாயிருந்தேன்…” (லூக்.22:15) என்று சொன்னார் அன்றோ? இப்படிக் கூறியவர் கொடூர மரண பயத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தன்னுடைய பிதாவை நோக்கி, “என் பிதாவே! கூடுமாகில் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு அகலக்கடவது. ஆகிலும் என் மனதின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்” (மத்.26:39) என்று எப்படி அபயமிடுகிறார்? வந்.பீட் என்பவர் இந்த ஆச்சரியமான கேள்விக்கு பதில் தருகையில் “…இப்படிச் சொல்லியது, தான் மெய்யாகவே மனிதனாக இருக்கிறார் என்பதைக் காண்பிக்கவேஎன்று கூறுகிறார். நமது நேச இரட்சகர் தன்னுடைய மரணத்தினால், நம் மேல் அவர் கொண்டிருந்த நேசத்தைக் காண்பித்தது மட்டுமின்றி, தான் (சில பதிதர்கள் தேவ தூஷணம் சொல்வது போல்) அசாதாரணமான சரீரத்தில்அல்லது தனது தெய்வீகத்தின் உதவியால் எந்த விதமான துன்ப வருத்தமின்றி இறந்தார்என்று எண்ணாதவாறு செய்வதற்காகவே, இந்த அபயக் குரலை தனது பிதாவை நோக்கி எழுப்பினார். இந்தக் கூக்குரல், தனது ஜெபத்தை பிதா கண்டிப்பாய் கேட்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, இதன் மூலம் அவர் மெய்யாகவே மனிதனாய், மரணப்பயத்தால் பீடிக்கப்பட்டு துன்ப வருத்தங்களை அனுபவித்து மரித்தார் என்பதற்காகவே!

II            
                சலிப்படையத் தொடங்கினார்”. சேசுநாதர் தமக்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த வேதனைகளை, கொடூரத்தை நினைத்த மாத்திரத்தில் சலிப்படையலானார். சலிப்படைந்திருக்கிற ஒருவருக்கு கரும்புகூட கசப்பானதாகத்தான் இருக்கும். தன்னுடைய மனக் கண்களுக்கு முன் காண்பிக்கப்பட்ட கொடூரமான காரியங்கள், தனது வாழ்வின் இறுதியின் கொஞ்ச காலத்தில் அவருடைய ஆத்துமத்திலும், சரீரத்திலும், அகத்திலும் புறத்திலும், தாம் அனுபவிக்க இருந்த அனைத்து சித்திரவதைகளும், சேசுநாதரை எவ்வளவு மனச்சலிப்படையச் செய்திருக்கும்!
                அவ்வேளையில் அவர் அனுபவிக்கவிருக்கும் வாதைகள், யூதர்களிடமிருந்தும், உரோமை படை வீரர்களிடமிருந்தும் பெறவிருக்கும் நிந்தை அவமானங்கள், ஏளனப் பேச்சுக்கள், நீதிபதிகளின் அநீதங்கள், அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவராய், மனிதர்களாலும் ஏன், சர்வேசுரனாலும் கைவிடப்பட்டவராக மரணமடையும் காட்சி என இவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவருடைய மனக் கண்களுக்கு முன்பாக வந்தன. இதனால் சலிப்படைகிறார். அதன் காரணமாகத்தான் அவர் தம் பரம பிதாவை நோக்கி ஆறுதலுக்காக ஜெபித்தார். ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றி அவரைத் தேற்றினார்” (லூக்.22:43) சம்மனசு வந்து பணிவிடை செய்ததன் விளைவாக தெம்பு வந்தது. ஆனால் இத்தெம்பு அவருடைய பாடுகளைக் குறைப்பதற்குப் பதிலாக அவற்றை அதிகரித்தது என்று வந்.பீட் கூறுகிறார். இந்த தெம்பு அவருடைய துக்கத்தை தணிப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தியது. ஆம். சம்மனசுசானவர், சேசு மனிதர்கள் மேல் கொண்ட அன்பின் காரணமாகவும், பிதாவின் மகிமைக்காகவும் இன்னும் அதிக துன்பப்படும்படியாகவும் அவரைத் தேற்றினார்.
                ஆ! என் நேச ஆண்டவரே! இந்த முதல் போராட்டம் எப்பேர்ப்பட்ட துன்பத்தை உமக்கு வருவித்தது! உம்முடைய சரீர பாடுகளின் போது, சாட்டைகளால் அடிக்கப்படுதல், முள்முடி சூட்டப்படுதல், ஆணிகளால் அறையப்படுதல் போன்றவைகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வந்தன. ஆனால், ஜெத்சேமனி தோட்டத்திலோ எல்லா பாடுகளும் ஒரே நேரத்தில் வந்து நசுக்கியதே! இவையனைத்தையும் என் மேல் வைத்த நேசத்திற்காக, எனது நலனுக்காக அல்லவோ ஏற்றுக் கொண்டீர் சுவாமி!
                ஓ என் தேவனே! கடந்த காலத்தில் உம்மை நான் நேசியாமல் போனதற்காகவும், உம்முடைய சித்தத்தை செய்வதற்குப் பதிலாக, எனது சொந்த சபிக்கப்பட்ட சுகங்களையும், இன்பங்களையும் நாடினதற்காக மெய்யாகவே மனஸ்தாபப்படுகிறேன். இவைகளை இப்போது என் முழுமனதோடு வெறுக்கிறேன். என்னை மன்னித்தருளும் சுவாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக